திருநெல்வேலி: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் நேற்று மாலையில் நடந்த ஆடித்தபசு காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையும், இரவும் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. விழாவின் 9ம் திருநாளில் தேரோட்டம் நடந்தது. 11 நாள் திருவிழாவில் முக்கிய நிகழ்வான ஆடித்தபசு நேற்று நடந்தது. காலையில் சுவாமி அம்பாளுக்கும் சந்திரமவுலீஸ்வரருக்கும் அலங்கார பரிவட்டம் நடந்தது. மாலை 6.25 மணிக்கு சங்கரநாராயணராக காட்சியளிக்க ரிஷப வாகனத்தில் வந்தார். சங்கரன்கோவில் தெற்கு ரதவீதியில் நடந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கூடியிருந்தனர். தபசு மண்டபத்தில் இருந்து கோமதியம்பிகை தங்க தேரில் காட்சி மண்டபத்திற்கு வந்தார். அங்கு சங்கரநாராயணரை மூன்று முறை வலம் வந்தார். பின்னர் சங்கரநாராயணர் முன்பு இருந்த திரை விலக்கப்பட்டு சுவாமி சங்கரநாராயணராக காட்சியளித்தார். பின் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவிலும் தபசு காட்சி நடந்தது.