சிதம்பரம்-சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி சட்டவிரோதமாக ஹிந்து அறநிலையத் துறை கடிதம் அனுப்பியதற்கு பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழக அறநிலையத்துறை ஆணையாளருக்கு பொது தீட்சிதர்கள் சார்பில் பொது தீட்சிதர்கள் செயலாளர் கார்த்தி என்கிற ஹேமசபேச தீட்சதர் அனுப்பியுள்ள கடிதம்: கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் அரசியல் சாசன பாதுகாப்பு பெற்று கடந்த 6.1. 2014 தேதி உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகிறார்கள்.
இதனை ஹிந்து அறநிலையத்துறை ஒப்புக்கொண்டுள்ளது.தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத கோவில் கணக்கு விவரம், நகை சரிபார்த்தல் ஹிந்து அறநிலையத்துறை சட்டப் பிரிவின் கீழ் கேட்பது, காவல்துறை, வருவாய்த்துறை விதிகள் கொண்டு நிர்பந்தம் செய்வதும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும், அரசியல் சாசனத்தை மீறி மறைமுகமாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அரசின் நடவடிக்கைக்கு பொது தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்துக்கொள்கிறோம்.வழிபாட்டுத் தலங்களில் அதிகமான காவல்துறை பலத்தோடு வழிபாடு மற்றும் மதரீதியான கடமைகளில் இடையூறு செய்வது உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக அரசாணை பிறப்பித்துள்ளனர். ஆய்வு குழு வருகை அறிவிப்பை அச்சு மற்றும் ஊடகத்துறையின் மூலம் செய்தி வெளியிட்டு, பொதுமக்களிடம் பொது தீட்சிதர்களுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகும்.காவல்துறையை வைத்து கோவில் நிர்வாகத்தை அச்சுறுத்துவது. ஹிந்து அறநிலையத்துறை நிர்வாகத்தை கைப்பற்ற முயற்சி செய்வது. இவை சட்டவிரோதமானதும், அரசியல் சாசன விதிமுறைகளை மீறியதாகும்.தமிழக அரசு பொது தீட்சிதர்கள் மீது அடக்குமுறையை தொடர்வதால் எங்களின் உயிருக்கும் தனிநபர் மற்றும் தெய்வ வழிபாட்டு முறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொது தீட்சிதர்கள் அரசியல் சாசனத்தின் பாதுகாப்பிறகுட்பட்ட அடிப்படை கடமைகளை செய்வதற்கும் , ஜனாதிபதி, பிரதமர், தமிழக கவர்னர், மத்திய, மாநில உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.மதரீதியான வழிபாடு மற்றும் கடமையை செய்வதற்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதிமொழி அளிக்கவில்லை என்றால் , கோவிலையும் அரசியல் சாசன பாதுகாப்பை பெற, மதம் மற்றும் நிர்வாக உரிமையை காக்க மிகவும் கடுமையான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம்.நடராஜப் பெருமானின் துாக்கிய திருவடியில் சரணடைந்து நடராஜர் மற்றும் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கடிதத்தில் குறிபிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 7 மற்றும் 8 தேதிகளில் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அறநிலையத்துறை சார்பில் பொது தீட்சிதர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளர்.இந்நிலையில் பொது தீட்சிதர்கள் ஜனாதிபதி, பிரதமர், தமிழக கவர்னர், முதல்வர், அறநிலைத்துறை செயலாளர் உட்பட முக்கிய அரசு பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஹிந்து அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து பொது தீட்சிதர்கள் சார்பில் வழக்கறிஞர் சந்திரசேகரன் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.