இருக்கன்குடி கோயிலுக்கு ரூ.30 கோடியில் நடைபாதை; விரைவில் பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2022 06:06
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு ரூ.30 கோடியில் சாத்துார் - இருக்கன்குடி வரையிலான 8 கி.மீ., துாரத்திற்கு பேவர்பிளாக் பாதசாரிகள் நடைபாதை அமைக்கப்படஉள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயில் ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுகிறது.
இங்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், திருவிழாக்காலங்களில் 5 முதல் 10 லட்சம் பக்தர்களும் வந்து செல்கின்றனர். இவர்களில் பாத யாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவோர் அதிகம். இதில் சாத்துார் - இருக்கன்குடி செல்லும் ரோட்டில் நடந்து வரும் போது அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. இதையடுத்து ரோட்டை ஒட்டி பக்கவாட்டில் 8 கி.மீ., துாரத்திற்கு பேவர் பிளாக் நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அகலம் 3 மீட்டர். கோயில் சென்றடையும் இடத்தில் 6 மீட்டர் வரை விரிவடையும். பக்தர்கள் ஓய்வெடுத்து செல்ல நிழற்குடை, குடிநீர் வசதியும், சுகாதார வளாக வசதியும், நடைபாதை முழுக்க சோலார் கூரை அமைத்து மின்வசதியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.அதில் 5 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்படும். தேவை போக மீதமுள்ள மின்சாரத்தை மருத்துவமனைக்கு அனுப்பவும் ஆலோசித்து வருகின்றனர். விரைவில் பணிகள் துவங்க உள்ளன.