பதிவு செய்த நாள்
01
ஜூன்
2022
06:06
செங்கல்பட்டு: செங்கல்பட்டு கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம், 35 ஆண்டுகளுக்கு பின், வரும் 3ல் நடக்கிறது.
செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இதன் விமானங்கள், சன்னிதிகள், பிரகாரங்கள், சுற்றுச்சுவர் ஆகியவை சிதிலமடைந்து காணப்பட்டன.மேலும், கும்பாபிஷேகம் நடத்தி 35 ஆண்டுகள் ஆனது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கையை ஏற்று, கோவிலில் திருப்பணிகள் செய்ய, இரு ஆண்டுகளுக்கு முன், 31 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டது. இந்த நிதியுடன், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நன்கொடையாக 60 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. மொத்தம் 91 லட்சம் ரூபாய் மதிப்பில், கோவிலில் திருப்பணிகள் துவங்கி, மூன்று மாதங்களுக்கு முன் நிறைவடைந்தன. தொடர்ந்து, கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 3ம் தேதி காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் நடக்கிறது.இவ்விழாவை, பெரிய நத்தம் கிராமத்தினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.