பதிவு செய்த நாள்
01
ஜூன்
2022
06:06
சென்னை : திருவொற்றியூர், கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் சம்ப்ரோக்ஷணம், வரும் ஆக., மாதம் நடத்துவதற்கு ஏற்ற வகையில், திருப்பணிகள் விரைவில் முடிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை, திருவொற்றியூர், காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணிகள் குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.பின், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 450 ஆண்டுகள் பழமையானது.
கடைசியாக , 2003ம் ஆண்டு சம்ப்ரோக்ஷணம் நடத்தப்பட்டது. தற்போது, 80 லட்சம் ரூபாய் மதிப்பில், பெருமாள், தாயார், ஆண்டாள், ராமர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் சன்னதிகள், ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளிட்டவற்றில் திருப்பணிகள் நடந்து வருகின்றன.சேதமடைந்துள்ள குளத்தின் படித்துறையை சீரமைக்கவும், கோவிலை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவில் திருப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதம் சம்ப்ரோக்ஷணம் நடத்த ஏற்ற வகையில், கோவில் நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இக்கோவில் நிலத்தில், வாடகைதாரர்கள் குறைந்த வாடகை செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கு, தற்போது உள்ள சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு, வாடகைத் தொகை உயர்வு செய்யப்படும்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 200 கோடி மதிப்பீட்டில், பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளது. அக்கோவிலில், திருப்பதிக்கு இணையாக, 500 நபர்கள் அமரும் வகையில், கியூ காம்ப்ளக்ஸ் அமைக்கப்படவுள்ளது. ராமேஸ்வரம், சமயபுரம், பழநி, பெரியபாளையம் போன்ற கோவில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.கோவில்களில், உலோகத் திருமேனிகள், கற்சிற்பங்களின் பாதுகாப்பு உறுதி செய்ய, பாதுகாப்பு மையம், காவலர்களும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு, அமைச்சர் சேகர்பாபு கூறினார். இந்த ஆய்வின்போது, அறநிலையத்துறை கமிஷனர் பொறுப்பு கண்ணன், இணைக் கமிஷனர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.