பதிவு செய்த நாள்
02
ஜூன்
2022
07:06
மேட்டுப்பாளையம், காரமடை அருகே வீரமாஸ்தி அம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
காரமடையை அடுத்த தோலம்பாளையத்தில், மிகவும் பழமைவாய்ந்த வீரமாஸ்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் விழா, விநாயகர், கணபதி பூஜையுடன், நவகிரக லட்சுமி ஹோமத்துடன் துவங்கியது. சர்வ சக்தி விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரியை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். யாக குண்டம் அமைத்து நான்கு கால யாக பூஜைகள் செய்தனர். கோபுர கலசமும், கன்னிமூல கணபதி, ஆதி மூலஸ்தானம், முருகன், வீரமாத்தி அம்மன் சிலைகள் அமைத்து, எண்வகை மருந்து சாத்தப்பட்டது. நேற்று காலை யாகசாலையில் இருந்து, தீர்த்த குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, கோபுர கலசத்தின் மீதும், சுவாமி சிலைகள் மீதும், ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்தனர்.