பதிவு செய்த நாள்
03
ஜூன்
2022
06:06
வளசரவாக்கம், அரைகுறையாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள அகத்தீஸ்வரர் கோவில் குளத்தை, துணை மேயர் திடீர் ஆய்வு மேற்கொண்டதையடுத்து, பணிகள் மீண்டும் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பின் கீழ் உள்ள இந்த கோவிலை ஒட்டி, 60 ஆயிரம் சதுர அடி பரப்பில் திருக்குளம் அமைந்துள்ளது.குளத்திற்கு போதிய வரத்து கால்வாய் இல்லாததால் வறண்டு காட்சியளித்தது. வரத்து கால்வாய்கள் அமைத்து, குளத்தை துார் வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என, நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாயின.இதன் எதிரொலியாக, குளத்தில் மழை நீர் தேங்கும் வகையில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. மேலும், 87 லட்சம் ரூபாயில், குளத்தை துார் வாரி, கரையமைத்து, நடைபாதை, மின் விளக்குகள் அமைக்கும் பணிக்காக, மாநகராட்சி சார்பில் ஒப்பந்தம் கோரப்பட்டது.இதையடுத்து, குளத்தை துார் வாரி கரையமைக்கும் பணிகள் நடந்தன. ஒப்பந்தப்படி இப்பணிகள், 2021 செப்., 30ம் தேதியுடன் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.பல்வேறு காரணங்களால், குளத்தை சீரமைக்கும் பணிகள் பல மாதங்களாக தடைபட்டுள்ளன. இந்த நிலையில், சமீபத்தில் பெய்த மழையில் குளம் நிரம்பி காட்சியளித்தது.தற்போது தண்ணீர் வடிந்துள்ள நிலையில், குளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில், இக்குளத்தை துணை மேயர் மகேஷ் குமார் நேற்று ஆய்வு செய்தார்.அப்போது, ஆகஸ்ட் மாதத்திற்குள் குளத்தை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அதிகாரிகளை அறிவுறுத்தினார். இதனால் குளத்தை சீரமைக்கும் பணி மீண்டும் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுஉள்ளது.