அய்யங்கார்குளம் சஞ்சீவராயர் கோவில் சீரமைப்பு பணி எப்போது துவங்கும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2022 06:06
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் பகுதியில் அமைந்துள்ள பழைமையான சஞ்சீவராயர் கோவில் திருப்பணி எப்பொழுது துவங்கும் என அப்பகுதி பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்துள்ள அய்யங்கார்குளம் பகுதியில் பழமையான சஞ்சீவராயர் கோவில் அமைந்துள்ளது. விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் தொண்டை மண்டலத்தில் ஹனுமனுக்காக கட்டப்பட்ட தனி பெரிய கோவிலாகும்.இக்கோவில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் இக்கோவிலில் எழுந்தருள்வார். இங்கு அவருக்கு திருமஞ்சனம் நடைபெறும். இந்நிலையில் பழமையான சஞ்சீவராயர் கோவில் சிதிலமடைந்து இருப்பதால், திருப்பணி துவங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து கடந்த 2016 - 2017ம் ஆண்டு 27 லட்ச ரூபாய் திருப்பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டது.பின் பல்வேறு காரணங்களால் திருப்பணி துவங்கி அரைகுறையாக விடப்பட்டது. அந்த நிதி அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது:மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோவிலை அரசு திருப்பணி செய்து பராமரிக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு முன் திருப்பணி துவங்கியது. ஆனால் பாதி வேலை கூட நடக்க வில்லை. அர்த்த மண்டபம், ராஜகோபுரம் சுற்று சுவர் போன்ற அனைத்தும் பழுதடைந்துள்ளது. அந்த காலத்தில் கோவிலை சுற்றிலும் சுற்றுசுவர் கட்டப்பட்டிருந்தது.காலப்போக்கில் சுவர் இடிந்து அப்படியே உள்ளது. அறநிலையத்துறை இக்கோவிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:திருப்பணி துவங்குவதற்கு மண்டல குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். மாநில கமிட்டி குழு ஆய்வு முடிந்த பின் திட்ட மதிப்பீடு தயார் செய்து அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பப்படும். அவர் ஒப்புதல் கிடைத்தவுடன் திருப்பணி துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.