பதிவு செய்த நாள்
07
ஜூன்
2022
05:06
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகேயுள்ள வீரசின்னம்பட்டி முத்தாலம்மன், கோட்டை கருப்பணசாமி, காளியம்மன், பகவதி அம்மன் மாரியம்மன் கோவில்களில் சாமி கும்பிடு திருவிழா நடந்தது.
விழாவையொட்டி கடந்த மே 22 அம்மனுக்கு கம்பம் ஊன்றி, பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. ஜூன் 3 கோட்டை கருப்பணசாமி மேளதாளத்துடன் மாலை அணிவித்து, பொங்கல் வைத்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஜூன் 5 கிராம தெய்வங்களுக்கும், கோட்டை கருப்பணசாமிக்கும் அபிஷேகம் மற்றும் வானவேடிக்கை உடன் அம்மன் கண் திறந்து முத்தாலம்மன் கோவில் வந்தடைதல், காளியம்மனுக்கு சந்தான வர்தினி ஆற்றங்கரையில் கரகம் ஜோடித்து கோவில் வந்தடைந்து, அரண்மனை பொங்கல் வைத்தல் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு, முளைப்பாரி, அக்னிச்சட்டி எடுத்தல் மற்றும் கிடாய் வெட்டி பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வான கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.
அதில் கோவில் முன் உள்ள மூன்று குட்டி கழுகு மரங்களில் இளைஞர்கள் ஏறி அமர்ந்துகொண்டனர், அதன்பின் சுமார் 75 அடி உயரம் கொண்ட என்னை ஊற்றப்பட்ட வலுக்கும் கழுகு மரத்தில் இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏறி, மரத்தின் உச்சியில் இருந்த முடிப்பை எடுத்துக்கொண்டு கீழே இறங்கிய உடன் அந்த இளைஞர் கிடாய் வெட்டினார்.பின் குட்டி கழுவு மரத்தில் இருந்த மூன்று நபர்களும் இறங்கி வெட்டப்பட்ட கிடாயின் தலையை வாயில் கவ்விக் கொண்டு ஓடிய வினோத நிகழ்ச்சியும் நடந்தது. பின் மேளதாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைதல் நடந்தது. இன்று ஜூன் 8 காளியம்மன், பகவதி அம்மன், மாரியம்மன் கரகங்கள் மற்றும் முளைப்பாரியுடன் கங்கை செல்லுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வீரசின்னம்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.