பதிவு செய்த நாள்
07
ஜூன்
2022
06:06
சிங்கப்பெருமாள் கோவில், பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம், 9ல் நடக்கவுள்ளதை முன்னிட்டு, தேர் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. தேர் செல்லும் பாதையும் சீரமைக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பெருமாள் கோவில், அனுமந்தபுரம் செல்லும் சாலையில், பிரசித்தி பெற்ற பல்லவர் கால பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் சமேத அஹோபிலவல்லி தாயார் குடைவரை கோவில் உள்ளது. இக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா, விமரிசையாக நடைபெறும். கோவில் ராஜகோபுரம் கட்டும் பணிகள் காரணமாக, 2015 முதல் பிரம்மோற்சவம் நடக்கவில்லை. இந்தாண்டுக்கான பிரம்மோற்சவத்திற்கு மே 28ல் பந்தக்கால் நடப்பட்டது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும், 9ம் தேதி நடக்கிறது.இதை முன்னிட்டு, மூடப்பட்டிருந்த தேரின் கூரை, பக்கவாட்டு தகடுகள் அகற்றப்பட்டு, துாய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.அதேபோல், நரசிங்க பெருமாள் கோவிலுக்கு எதிரே உள்ள, அனுமன் சன்னிதிக்கு செல்லும் சாலை, தேர் செல்வதற்கு ஏற்ப சீரமைக்கப்பட்டு வருகிறது.