பதிவு செய்த நாள்
07
ஜூன்
2022
06:06
சிதம்பரம் : நாங்கள் யாருக்கும் எதிர்ப்பானவர்கள் இல்லை; எங்கள் மீது திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்தப்படுகிறது, என, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தெரிவித்து உள்ளனர்.
பொது தீட்சிதர்களின் செயலர் ஹேம சபேச தீட்சிதர் வெளியிட்ட அறிக்கை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பாரம்பரிய முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை, தனிப்பட்ட தீட்சிதர் மீதோ, பொது தீட்சிதர்கள் மீதோ எந்த புகாரும் பக்தர்கள் அளித்ததில்லை. ஆனால், தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் அவதுாறான புகார் செய்து, கோவில் நிர்வாகத்தை அரசு ஏற்க வேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு பொது தீட்சிதர்கள் மீது களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர்.
பொது தீட்சிதர்கள், பக்தர்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுவதாக பரப்பப்படும் பொய் பிரசாரம், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.கோவில் நிர்வாகம் மற்றும் நடைமுறைகள் கோவில் சட்டம் மூலம் பின்பற்றப்பட்டு வருகிறது. தீட்சிதர்களுக்குள் ஏற்படும் நிர்வாக ரீதியான பிரச்னைகளை, தீட்சிதர்களின் பொதுசபை மூலம் தீர்வு கண்டு, தவறிழைத்த தீட்சிதர்களின் மீது கோவில் சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த சில தீட்சிதர்கள், கடவுள் மறுப்பு எதிர்ப்பாளர்களுடன் கைகோர்த்து, பொய் பிரசாரம் செய்கின்றனர். கோவிலை, ஜனநாயக அடிப்படையிலும், வெளிப்படையாகவும் நிர்வாகம் செய்து வருகிறோம்.பக்தர்களிடம் பிரச்னை மற்றும் பொது தீட்சிதர்களுக்குள் பிரச்னை என்பது மிகைப்படுத்தப்பட்ட பொய், அவதுாறு பிரசாரத்தின் விளைவு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அறநிலையத்துறை அமைச்சரிடம் இதுகுறித்து தெரிவித்தோம்.கோவில் பூஜை மற்றும் மற்றும் நிர்வாகத்தை அரசியல் சாசன பாதுகாப்புடனும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படியும் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாக பாரம்பரிய முறைகளை மாற்றுவதற்கு உடன்படாமல் செயல்படுபவர்கள்.அரசுக்கோ, ஹிந்து சமய அறநிலயத்துறைக்கோ, தீட்சிதர்கள் எதிர்ப்பானவர்கள் அல்ல; எங்கள் மீது திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்தப்படுகிறது. அறநிலையத்துறை சமீபத்திய நடவடிக்கைகள் கோர்ட் தீர்ப்புக்கு எதிராகவும், அறநிலையத்துறை சட்டப்பிரிவுக்கு மாறாகவும் இருப்பதால், வழக்கறிஞர்களின் சட்ட ஆலோசனைப்படி ஆட்சேபனைகள் செய்தோம்.
எங்களது சட்ட ஆலோசகர்கள், சுப்ரீம் கோர்ட்டில் எங்களின் அரசியல் சாசன பாதுகாப்பு பெற்ற உரிமைகளை வலியுறுத்தி ஆட்சேபனை கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.நாங்கள் அரசுடன் இணக்கமான சூழ்நிலையை விரும்புகிறோம். அதே சமயத்தில் எங்கள் அரசியல் சாசன பாதுகாப்பு உரிமைகளை வலியுறுத்துகிறோம். நாங்கள் கோவிலில் அமைதியான சூழலில் இருந்தபடி, பக்தர்கள் இடையூறின்றி தரிசனம் செய்ய விரும்புகிறோம். பக்தர்களின் எதிர்பார்ப்பின்படி, தொடர்ந்து கோவிலில் அமைதியான வழிபாடுகள் தொடரவும், சமீபத்திய தேவையற்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அரசு மற்றும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.