வள்ளலார் சர்வதேச மையம்: வடலுாரில் அமைச்சர்கள் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2022 06:06
வடலுார் : வடலுார் வள்ளலார் சத்திய ஞான சபை மற்றும் தரும சாலை ஆகியவற்றை நேற்று ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டனர்.பின்னர் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது.வடலுார் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்று வேளாண் துறை அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டேன்.தமிழக முதல்வர் ஆணைக்கேற்ப இந்த மையம் அமைப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்துகிறோம். இங்கு மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து கலந்தாய்வு செய்தோம். சர்வதேச மையம் அமைப்பதற்காக ஒப்பந்தங்கள் கோரப்பட்டு 11 விண்ணப்பங்கள் வந்து, அதில் மூன்று பேர் தகுதியின்மையால் தள்ளுபடி செய்யப்பட்டு 8 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள்.அதில் ஒருவர் தானாக விலகிக் கொண்டார். அதிலும் 5 பேரின் வரைபடங்களை ஆய்வு செய்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இறுதி வரைப்படம் தேர்வு செய்யப்பட்டு, இம்மாத இறுதிக்குள் பணிகள் துவங்கப்பட உள்ளது.
சர்வதேச மையம் என்பது பெயருக்கு தகுந்தாற்போல் உலகம் முழுவதிலுமிருந்து வரும் பக்தர்கள் வசதிக்கேற்ப அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். முதல்வரின் கனவை நிறைவேற்றும் பணியில் ஹிந்து அறநிலையத்துறை தன்னை முழுமையாக ஈடுபடுத்தி உள்ளது.வரும் அக்டோபர் மாதம் வள்ளலார் 200ம் ஆண்டை முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட உள்ளது. அக்டோபர் 5ம் தேதி முதல் இந்த ஆண்டு முழுவதும் 52 வாரங்கள் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. ஹிந்து அறநிலைத்துறை அதற்கான பணிகளை செய்ய உள்ளது.இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.