பதிவு செய்த நாள்
09
ஜூன்
2022
11:06
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று இரண்டாம் நாளாக அறநிலையத்துறையினர் ஆய்வுக்கு வந்தபோது நேற்றைய நிலையே தொடர்ந்தது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில் ஆய்வறிக்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்து வெளியேறினர்.
கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ் பெற்ற நடராஜர் கோவிலில் வெளிநாடு மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் நிறுத்ப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. இதன் காரணமாக அரசு தலையிட்டு பக்தர்களை கனகசபையில் அனுமதிக்க அரசாணை பிறப்பித்து அதனை செயல்படுத்தியது. அதனை தொடர்ந்து இம்மாதம் 7, 8 ம் தேதியில் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு வர உள்ளதாக கோவில் நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பினர். அதற்கு கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்,அறநிலையத்துறை மற்றும் கோவில் தீட்சிதர்கள் ஒருவருக்கொருவர் கடுமையான அறிக்கை போர் நடத்திக்கொண்டனர். அதில் தீட்சிதர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பு நகலை மேற்கொள் காட்டி நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் 7, 8 தேதிகளில் ஆய்வு மேற்கொள்ள இருந்த நிலையில் 6 ம் தேதி கடலுார் மாவட்டம் வடலுார் சத்தியஞானசபைக்கு வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தரிசனம் முடிந்து அளித்த பேட்டியில், இறைவனுக்கும், பக்தர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் ஒரு பாலமாக இருந்து அனைத்து பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து சென்றார். இந்நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் அறிக்கை அனுப்பியது போல் 7 ம் தேதி காலை 9 மணிக்கு அதிகாரிகள் குழுவினர் நடராஜர் கோவிலுக்கு ஆய்வு வந்தனர். வேலுார் இணை ஆணையர் லட்சுமணன், பழனி கோவில் இணை ஆணையர் நடராஜர், அறநிலையத்துறையின் ஆலய நிலங்களுக்கான மாவட்ட வருவுாய் ஆய்வாளர் சுகுமார் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்தபோது கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் சட்டப்படி தங்களுக்கு ஆய்வு மேற்கொள்ள எந்த அதிகாரமும் இல்லை என பொது தீட்சிதர்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலின் சுற்று பகுதி மற்றும் உள் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர். கணக்கு வழக்குகளை கேட்க முடியாமல் திரும்பி சென்றனர். நேற்று இரண்டாம் நாள் ஆய்வுக்காக வந்த அதிகாரிகளை பொது தீட்சிதர்கள் அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்து வைத்தனர். தொடர்ந்து கோவில் செயலர் மற்றும் வழக்கறிஞரை சந்திக்க வேண்டும் அதிகாரிகள் கேட்டபோது, தட்சிதம்பரம் சார்பில், இருவரும் ஊரில் இல்லை, நேற்று நாங்கள் கொடுத்த விளக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சிறிது நேரம் தங்களுக்கும் கலந்தாலோசனை செய்த அறநிலையத்துறை அதிகாரிகள் பின்னர் மீண்டும் கிளம்பி சென்றனர். அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆய்வால் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.