ஆன்மிகச் சொற்பொழிவாளரான வாரியார் ஒரு தமிழ்க் கடல். பாமரர்களிடமும் ஆன்மிகத்தைக் கொண்டு சேர்த்த பெருமை இவருக்குண்டு. ‘இது அருந் – தேன். இதை அருந்தேன் என்று எவன் சொல்லுவான்? அருந்தவே இருந்தேன் என்பான்`, ‘ராமனுடைய பாத - கமலம், ராவணனுடைய பாதக - மலத்தை நீக்கியது’ என்பன போன்ற நயமாக வாக்கியங்களைப் போகிற போக்கில் அநாயாசமாகச் சொல்லும் வல்லமை பெற்றவர். சொற்பொழிவு முடிந்ததும் குழந்தைகளிடம் கேள்வி கேட்பார். சரியாக பதில் சொன்னால் புத்தகங்களைப் பரிசளிப்பார். நடிகர் சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல் திரைப்படம் பற்றி வார இதழ் ஒன்று ஒரே வரியில் விமர்சனம் கேட்டது. ‘சிவாஜி நல்ல முறையில் இப்படத்தில் ‘சிவ - ஜி’யாக நடித்திருக்கிறார்’ என பதிலளித்தார். ஒரு கூட்டத்தில் வாரியாரிடம், அவரைப் பற்றி பேசுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தன்னைப் பற்றி என்ன பேசுவது எனத் தெரியாமல் திகைத்து நின்றார். அந்த கூட்டம் மஹாபெரியவர் முன்னிலையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘‘நீ சம்பாதிக்கும் ஒவ்வொரு காசிலும் சொந்த செலவுக்குப் போக மற்றவை அனைத்தையும் கோயில் திருப்பணிக்கே கொடுத்து விடுகிறாய் என்பதைச் சொல்வது தானே’’ என மக்கள் முன்னிலையில் கேட்டார் மஹாபெரியவர். பெரியவரின் மனம் திறந்த பாராட்டைக் கேட்டு வாரியார் இதயம் விம்மினார். ‘என் குடும்பத்தினருக்குக் கூடத் தெரியாத செய்தியை என் மீதுள்ள அன்பால் உலகம் அறிய சுவாமிகள் பிரகடனப்படுத்தியுள்ளார்’ என நெகிழ்ந்தார். மஹாபெரியவரை முதல்முறையாக தரிசிக்கச் சென்ற வாரியார் விழுந்து வணங்க முயன்றார். கைநீட்டித் தடுத்தார். திகைத்து நின்ற வாரியாரிடம், ‘‘கழுத்தில் எப்போதும் சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். பக்தரான நீங்கள் என்னை விழுந்து வணங்கும் போது அந்தச் சிவலிங்கம் தரையில் படும் அல்லவா? சிவலிங்கம் அவ்விதம் தரையில் படக் கூடாது. அதனால்தான் அப்படிச் சொன்னேன்’’என்றார். தன்னையும், தன் நித்ய பூஜையையும் மஹாபெரியவர் மதிப்பதைக் கண்டு பிரமித்துப் போனார் வாரியார்.