காஞ்சி மஹாபெரியவரின் தரிசனத்தால் மகிழ்ச்சியும், மனநிறைவும் பெற்ற பக்தர்கள் சூட்டி அழகு பார்த்த திருநாமங்கள் நடமாடும் தெய்வம், கண் கண்ட தெய்வம், கலியுக தெய்வம் என்பவை. ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதி காஞ்சி மஹாபெரியவர் என்னும் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். யாத்திரையிலோ, மடத்திலோ, வெளியூர் முகாமிலோ இவரைத் தரிசிக்கும் பேறு பெற்றவர்கள், ‘தெய்வத்தை நேரில் தரிசித்திருக்கிறேன்’ என பெருமையுடன் சொல்வார்கள். அண்மைக் காலத்தில் வாழ்ந்த அப்பழுக்கற்ற மகான் இவர். எளிமை, மனத்துாய்மை, பரோபகாரம், மனிதநேயம் என நற்பண்புகளை மனம், மொழி மெய்களால் பின்பற்றியவர். சந்நியாசம், சனாதன தர்மத்தில் என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே கடைபிடித்தார். இவர் போல் இன்னொருவர் மண்ணில் அவதரிப்பாரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். நுாறாண்டுகளைப் பூர்த்தி செய்வதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே ஸித்தி அடைந்தார். அவரது பிரிவைத் தாங்காமல் காஞ்சிபுரமே கண்ணீர் விட்டு அழுதது. அஞ்சலி செலுத்திய ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குத் தன்னார்வத் தொண்டர்கள் தாமே முன்வந்து உணவு வழங்கினர். கடைசி கடைசியாக அந்த மகானின் திருமுகத்தை பார்க்க வேண்டும் எனக் கண்ணீருடன் காத்திருந்த அஞ்சலிக் கூட்ட வரிசை பல கிலோமீட்டர் தொலைவுக்கு நின்றது. காஞ்சிபுரத்தில் இன்றும் பக்தர்கள் மஹாபெரியவரின் ஜீவசமாதியை தரிசித்து பலனடைகின்றனர்.