சிவகங்கை : நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி கோயிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் 501 பால்குடம், 101 பேர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 4ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் காலை, இரவு திருவீதி புறப்பாடு நடந்தது. வெள்ளி, தங்க ரத புறப்பாடு சிறப்பு பெற்றிருந்தன. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே எழுந்தருளும் களியாட்ட கண்ணாத்தாளுக்கு மணிமண்டபத்தில் பல்வேறு விதமான அபிேஷகங்கள் நடந்தது.
விழாவின் 10 ம் நாளான நேற்று காலை 501 பக்தர்கள் பால்குடமும், 101 பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கண்ணுடைய நாயகி கோயில் தெப்பக்குளத்தில் தொடங்கிய பால்குட உற்ஸவம் தேரோடும் வீதிகளை சுற்றி மீண்டும் கோயிலில் நிறைவு பெற்றது. அம்மனுக்கு பால் அபிேஷகம் செய்தனர். தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவண கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் இளங்கோவன் ஏற்பாட்டை செய்தனர்.