மதுராந்தகம்:அருங்குணம் முத்துமாரியம்மன் கோவில், 60ம் ஆண்டு வைகாசி பெருவிழா, வெகு விமரிசையாக நடந்தது. மதுராந்தகம் அடுத்த, அருங்குணம் கிராமத்தில், முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் இப்பகுதியில், ஆண்டுதோறும் அம்மனுக்கு, திருவிழா நடப்பது வழக்கம்.கொரோனா பெருந்தொற்று காரணமாக, இரு ஆண்டுகளாக விழாக்கள் நடக்கவில்லை. இயல்பு சூழல் நிலவுவதால் இந்தாண்டு, முத்துமாரியம்மனுக்கு 60ம் ஆண்டு வைகாசி பெருவிழா நடந்தது. அம்மனுக்கு காப்புக்கட்டி, தீ மிதி திருவிழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.நேற்று காலை 108 பால்குடம் எடுத்த பெண்கள், அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மதியம், அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பொதுமக்கள், தங்கள் நேர்த்திக்கடன் மற்றும் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இரவு கலை நிகழ்ச்சி நடந்தது.