பதிவு செய்த நாள்
19
ஜூன்
2022
11:06
தஞ்சாவூர், தஞ்சாவூரில், 24 பெருமாள்கள் கருட சேவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், தஞ்சை ராமனுஜ தர்சன சபா ஆகியவை இணைந்து 24 கருட சேவை விழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றன. இந்தாண்டு 88வது ஆண்டு கருடசேவை இன்று (19ம் தேதி) நடந்தது. இதில், 24 பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவில்களில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு கொடிமரத்து மூலை வந்தன. அங்கிருந்து ஹம்ச வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் முதலிலும், பின்னர் நீலமேகர், மணிக்குன்னர், நரசிம்மர், கல்யாண வெங்கடேசர், வேளூர் வரதராஜர், படித்துறை வெங்கடேசர், தெற்கு வீதி கலியுக வெங்கடேசர், கோவிந்தராஜர், ஜனார்த்தனர், கொண்டிராஜ பாளையம் யோக நரசிம்மர், கோதண்டராமர், கீழவீதி வரதராஜர், மேலவாசல் ரெங்கநாதர், மேலவீதி விஜயராமர், நவநீத கிருஷ்ணன், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமர், சுங்கரன்திடல் லெட்சுமி நாராயணர், மாகர் நோம்புச் சாவடி வெங்கடேசப் பெருமாள், நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட 24 பெருமாள்கள் வரிசையாக கருட வாகனத்தில் நான்கு முக்கிய வீதிகளிலும் வீதியுலாவாக பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்புரிந்து மீண்டும் கொடிமரத்து மூலையை வந்தடைந்தது. கருடசேவையின் போது ஆண்கள்,பெண்கள் கோலாட்டம் ஆடியும், மங்களாசாசனம் படியும் வழிப்பட்டனர். இதில், நான்கு வீதிகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, நாளை (20ம்தேதி) நவநீத கிருஷ்ணன் சேவை விழா அல்லது வெண்ணெய்த்தாழி மகோற்சவ விழா நடக்கிறது. காலை 6:00 மணிக்கு 15 பெருமாள்களும் நவநீத சேவைக்காக புறப்பட்டு காலை 7:30 மணிக்கு கொடிமரத்து மூலைக்கு, அங்கிருந்து கீழராஜவீதி, வடக்குராஜ வீதி வழியாக மீண்டும் கொடிமரத்து மூலையை அடைந்து அவரவர் கோவில்களுக்கு சென்றவடைவர். நிறைவு நாளான 21ம் தேதி விடையாற்றி திருவிழா நடக்கிறது. பெருமாள் நகர்வலத்தின் போது பரிகாரமாக நீராட்டு விழா முதலிய சிறப்பு வழிபாடுகள் வெண்ணாற்றங்கரை விண்ணகரங்களில் மேற்கொள்ளப்படுகிறது. காலை 9:30 மணிக்கு மேலசிங்கர் கோவிலில் தொடங்கும் திருமஞ்சனம், தளிகை, அலங்காரம், தீபாரதனை மதியம் 12 மணி வரை நடக்கிறது. இத்துடன் பன்னிரு கருடசேவை பெருவிழா நிறைவடைகிறது.