தேவகோட்டை : தேவகோட்டை அருகே சக்கந்தி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் முட்டக்குத்தி. இங்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சொர்ண காளீஸ்வரன் மங்களாம்பிகை என்ற சிவன் கோவில் இருந்ததாக கூறி , தேவகோட்டையை சேர்ந்த தனியார் ஒருவர் 17 ஆண்டுக்கு முன் சம்பந்தப்பட்ட இடத்தில் கோவில் கட்ட துவங்கினார்.
சில காரணங்களால் கோவில் கட்டும் பணி நின்று போனது. இதனைத் தொடர்ந்து கிராமத்தினர் கோவிலை தொடர்ந்து கட்ட முடிவு செய்தனர். அதற்கான பணிகளை துவக்கினர். கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக விநாயகர், சொர்ண காளீஸ்வரர், மங்களாம்பிகை அம்மன் உட்பட 15 புதிய விக்ரகங்கள் பொள்ளாச்சி சிற்பிகள் வடித்து நேற்று முட்டக்குத்தி கொண்டு வந்தனர். சுமார் 6 கி.மீ., தொலைவில் உள்ள பிரதான சாலை ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் இருந்தே கிராமத்தினர் வரவேற்று பட்டாசு வெடித்து வரவேற்றனர்.பக்தர்கள் கும்மியடித்தப்படியே ஊர்வலமாக சுவாமி விக்ரங்கங்களை கோவிலுக்கு கொண்டு வந்தனர். விரைவில் கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெறும் என கிராமத்தினர் தெரிவித்தனர்.