பதிவு செய்த நாள்
06
ஜூலை
2022
11:07
மயிலாடுதுறை: ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஆக்ஞா கணபதி, ஸ்ரீ ராம பாதுகா சன்னதிகளின் கும்பாபிஷேகம் மகா சுவாமிகளின் திருக்கரங்களால் நடத்தி வைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே அமைந்துள்ளது ஞானபுரீ சித்திரகூட சேத்திரம் ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி அஞ்சநேய சுவாமி கோவில். இக்கோவிலில் 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆஞ்சநேயர் சுவாமிக்கு வலதுபுறத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரும், இடது புறத்தில் ஸ்ரீகோதண்டராமர் சுவாமியும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி உள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் வளாகத்தில் பக்தர்கள் வேண்டும் வரங்களை வேண்டிய மாத்திரத்திலேயே கொடுக்கவல்ல ஸ்ரீ ஆக்ஞா கணபதி சன்னதி, ஒரு கோடி ராம நாமங்கள் வைக்கப்பட்டு அதன்மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ ராம பாதுகா சன்னதிகளின் மகா கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மாலை தொடங்கிய யாக சாலை பூஜைகள் காலை முடிவடைந்து மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடத்தப்பட்டது தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு ஆக்ஞா கணபதி, ஸ்ரீராம பாதுகா சன்னதிகளின் விமானத்தை அடைந்தது. தொடர்ந்த ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீவித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த சுவாமிகள் தனது திருக்கரங்களால் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தார். தொடர்ந்து விஸ்வரூப ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர், கோதண்டராமர், ஆக்ஞா கணபதி, ராம பாதுகாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து மகா சுவாமிகள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குருவருளையும், திருவருளையும் பெற்றனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மாதிகாரி ரமணி அண்ணா, திருமடத்தின் ஸ்ரீகரியம் சந்திரமௌலீஸ்வரர், அறங்காவலர்கள் ஜெகநாதன், வெங்கட்ராமன் ஆகியோர் செய்திருந்தனர்.