பதிவு செய்த நாள்
12
ஜூலை
2022
10:07
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்டு 88 திருக்கோயில்களில் தஞ்சாவூர் வடக்கு வீதி அருகே ராஜகோபால சுவாமி திருக்கோவில் இருக்கிறது. பொதுவாக பெருமாள் கோவில்களில் மூலவராக பெருமாள்தான் வீற்றிருப்பார். சக்கரத்தாழ்வார், தனிச்சன்னிதியில் எழுந்தருளியிருப்பார். அவருக்கு பின்புறம் நரசிம்மரின் உருவம் இடம்பெற்றிருக்கும். ஆனால் இங்கு சக்கரத்தாழ்வார், மூலவராக இருக்கும் காரணத்தால், கோவில் ராஜகோபுரத்தின் பின்புறம் வலது பக்கத்தில் யோக நரசிம்மரும், இடதுபக்கத்தில் கல்யாண நரசிம்மரும் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார்கள்.
ராஜகோபால சுவாமி ஆலயத்தின் ராஜகோபுரத்திற்கும், இரண்டாவது கோபுரத்திற்கும் இடையே, ‘பகுளாமுகி அம்மன்’ ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த அன்னையை ‘காளியம்மன்’ என்றும் அழைப்பார்கள். இந்த அம்மன், மராட்டியர்களின் இஷ்ட தெய்வமாக இருந்திருக்கிறாள். இந்த அம்மனை, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் மூலவரான பகுளாமுகி அம்மனைத் தவிர, கஜலட்சுமி, பைரவர், மார்த்தாண்ட பைரவர், சிவ துர்க்கை, கோலாப்பூர் மகாலட்சுமி, விஷ்ணு துர்க்கை, சப்த கன்னியர் திருமேனிகள் உள்ளன.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் வடக்கு வீதிக்கு அருகளில் உள்ளது. இங்கே, பகுளாமுகி எனும் திருநாமத்தில் காட்சி தந்தருள்கிறாள் மகிஷாசுரமர்த்தினி. கிழக்குப் பார்த்த நிலையில் எட்டுத் திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி, மகிஷனைக் காலடியில் போட்டு வதம் செய்யும் கோலத்தில் திருக்காட்சி தருகிறாள் காளிதேவி. கம்பீரமான ராஜகோபுரத்துடன் கூடிய ஆலயம், நாயக்கர் மற்றும் மராட்டியர்களின் சிற்ப ஆர்வத்துக்குச் சான்றாகத் திகழ்கிறது. ஆலயத்தில் சிவதுர்கை, விஷ்ணு துர்கை, கோலாப்பூர் மகாலட்சுமி, மார்த்தாண்ட பைரவர் சன்னதிகள் உள்ளன. செவ்வாய், வெள்ளியில் ராகுகால வேளையில் அம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால் மனதில் குறைகள் இன்றி நிம்மதியாக வாழலாம் என்பது ஐதீகம்.