பதிவு செய்த நாள்
19
ஜூலை
2022
07:07
பல்லடம்: பல்லடம் அருகே, அல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி கோவிலில் தொல்லியல் துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
பல்லடம் அடுத்த, கரைப்புதூர் கிராமம் அல்லாளபுரத்தில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த உலகேஸ்வர சுவாமி, மற்றும் கரிய காளியம்மன் கோவில்கள் உள்ளன. கடந்த, 27 ஆண்டுக்குப் பின் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான திருப்பணிகள் நடந்து வரும் சூழலில், ஈஸ்வரன் கோவிலில் உள்ள உண்ணாமலை அம்மன் சிலையை கும்பாபிஷேகத்துக்கு முன் மாற்றி அமைக்க வேண்டும் என, கோவில் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, நேற்று தொல்லியல் துறை ஆய்வு நடந்தது.
முன்னதாக, திருப்பணிகள் முடிந்த ஈஸ்வரன் கோவிலில், தொல்லியல் துறை வல்லுநர் அர்ஜூனன், அறநிலையத்துறை இணை இயக்குனர் குமரகுரு, மற்றும் கோவில் ஸ்தபதி கார்த்திக் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். இதில், கருவறை, அர்த்தமண்டபம், பிரகாரம் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து அறிவுறுத்தினர். இதையடுத்து, அம்மன் சிலையை மாற்றி அமைக்க வேண்டிய இடத்தில் ஆய்வு நடந்தது. கோவில், 1972ம் ஆண்டு அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களில் அம்மன் சிலை குறித்த விவரங்கள் இல்லை. மேலும், அம்மன் சிலை வெளியே இருந்தது தொடர்பான பழைய ஆவணங்களும் இல்லாததால், ஆதாரங்களை சேகரிக்க வேண்டி, சிலை முன்பு இருந்த இடத்தில் தோண்ட தொல்லியல் துறை அனுமதி அளித்தது. இதையடுத்து, கோவில் பிரகாரத்தின் தெற்கு பகுதியில் பூமி தோண்டப்பட்டது. சுமார் மூன்றடிக்கு ஆழம் தோண்டியதும், கருங்கல், மற்றும் செங்கற்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. கடிதத்துடன், ஆதாரங்களை இணைத்து அனுப்பி, அம்மன் சிலையை மாற்றுவதற்கு உண்டான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தார்.