அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள முருகப்பெருமான் சன்னதியில் நேற்றுமுன்தினம் காலை 10:00 மணிக்கு அபிஷேக பூஜை நடந்தது. பால், பன்னீர், சந்தனம், இளநீர் என 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் 1:30 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது. இரவு 7:00 மணிக்கு தங்கத்தேரில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்துடன் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். குன்னத்தூர் பழனியாண்டவர் கோவிலில் நேற்று முன்தினம் அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. இரவு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். சித்தர்கள் வழிபாடு செய்து பெருமை பெற்ற சாலையூர், வாரணாபுரம் பழனி ஆண்டவர் கோவிலில் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். குமாரபாளையம், எல்லப்பாளையம், கரியாம்பாளையம், கணேசபுரம் உள்ளிட்ட ஊர்களில் ஆடி கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.