பதிவு செய்த நாள்
24
ஜூலை
2022
03:07
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிகுண்டம் திருவிழா முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.
கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி குண்டம் விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த, 19ம் தேதி பூச்சாட்டுடன் விழா துவங்கியது. இன்று காலை கொடி ஏற்றும் விழா நடந்தது. தேக்கம்பட்டி ஊர் கிராம மக்கள், சிம்ம வாகனம் பொறித்த கொடியை அலங்காரம் செய்து, ஊர்வலமாக எடுத்து வந்தனர். கோவில் நிர்வாகத்தினர், பவானி ஆற்றின் கரையோரம் உள்ள முத்தமிழ் விநாயகர் கோவிலில் இருந்து, தேக்கம்பட்டி ஊர் பொதுமக்களை கோவிலுக்கு அழைத்து வந்தனர். கோவிலில் பூசாரிகள் ரகுபதி, ஜோதி வேலவன், தண்டபாணி, சரவணன் ஆகியோர் கொடிக்கு சிறப்பு பூஜை செய்தனர். அதன் பின்பு கொடியை கொடி மரத்தில் ஏற்றினர். பின்பு யாக வேள்வி பூஜை நடந்தது. இவ்விழாவில் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, பரம்பரை அறங்காவலர் வசந்தா உள்பட பணியாளர்கள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி கூறியதாவது: திருவிழா பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட, கோவில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார், இங்கிருந்து கோவிலை சுற்றி, பக்தர்களை கண்காணிக்க, 60 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சார்பில், நான்கு இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது ஆண்கள் பெண்களுக்கு என தனித்தனியாக, 14 இடங்களில் குளியல் அறைகளும், 18 இடங்களில் கழிப்பிடங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு ஐந்து இடங்களில், தொட்டிகள் வைத்து சுத்தமான குடிநீர் வழங்கவும், நான்கு லாரிகளில் நடமாடும் குடிநீர் வழங்கவும், ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. உணவு மற்றும் கட்டுப்பாட்டு துறையில் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே, கோவிலில் அன்னதானம் வழங்க வேண்டும். கோவில் அருகே தேக்கம்பட்டி ரோட்டிற்கு மேல் பகுதியில் உள்ள காலி இடத்தில், இரு சக்கர மற்றும் கார்களும், ஆர்.எஸ்.ஆர்., மண்டபம் அருகே பஸ்களும் நிறுத்த வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு உதவி கமிஷனர் கூறினார்.