பணக்கார முதலாளி ஒருவரிடம் வேலை பார்த்தார் முல்லா. அவர் தொடர்ந்து மூன்று தடவை கடைத்தெருவிற்குச் சென்றதை கண்ட முதலாளி விசாரித்தார். கோதுமை, முட்டை, எண்ணெய் வாங்க ஒவ்வொரு முறையும் சென்றேன் என்றார் முல்லா. கோபத்துடன் அவர் கடைக்குச் செல்லும் முன் என்ன தேவை என தீர்மானிப்பதே புத்திசாலித்தனம், ஒவ்வொரு தடவையும் பொருட்கள் வாங்க கடைக்குச்செல்வது முட்டாள்தனம் தானே. இனி இந்த தவறை செய்யாதீர் என எச்சரித்தார். ஒரு தடவை முதலாளிக்கு உடல் நலம் பாதித்தது. அவர் முல்லாவிடம் மருத்துவரை அழைத்து வர உத்தரவிட்டார். அதற்காக வெளியே சென்ற அவர் திரும்பிய போது அவருடன் மூன்று மனிதர்கள் வந்திருந்தனர். இவர்கள் யார்? என கேட்டார். இவர் மருத்துவர், அவர் மதகுரு, மூன்றாவது நபர் சமாதிக்குழி தோண்டுபவர் என்றார் முல்லா. மருத்துவரை மட்டும் தானே அழைத்து வரச் சொன்னேன் பிறகு எதற்கு மற்றவர்கள் என கேட்டார். தனித்தனியான செயலுக்கும் ஒவ்வொரு முறையும் வெளியே போகக்கூடாது என நீங்கள் தானே சொன்னீர்கள், அதை தான் செய்துள்ளேன் என்றார் முல்லா.ஆமாம் அன்று சொன்னதற்கும், இதற்கும் என்ன தொடர்பு? என கேட்டார் முதலாளி. உங்களுக்கோ உடல்நலம் சரி இல்லை. நோய்யைக்குணப்படுத்த மருத்துவர். நோய் முற்றி இறந்து விடுகிறீர்கள் என வைத்துக்கொண்டால் இறுதிப் பிரார்த்தனைக்கு மதகுரு. உங்கள் உடலைச் சமாதியில் வைப்பதற்கு புதைகுழி தோண்டுபவர். ஒவ்வொரு தடவையும் அழைத்து வரச் செல்லாமல் முன்யோசனையாக இவ்வாறு செய்தேன் என்றார் முல்லா. முதலாளியின் முகம் சுருங்கிப்போய் விட்டது.