பதிவு செய்த நாள்
13
ஆக
2012
10:08
திற்பரப்பு:பேச்சிப்பாறை பேச்சியம்மன் கோயிலில் மழைக்காக சிறப்பு பூஜை நடந்தது.குமரி மாவட்டத்தில் மழையின்றி நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதனால் விவசாயத்திற்கும், குடி நீருக்கும் தேவையான தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பருவமழை எப்போது பெய்யும் என எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சுகிறது. மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவியில் வரலாற்றில் முதன் முறையாக தண்ணீர் வரத்து முழுவதுமாக தடைபட்டது. வறண்டு போகும் அளவிற்கு அணைகளும் காணப்படுகிறது. மாவட்டத்தின் ஜீவாதாரமாக விளங்கும் பேச்சிப்பாறை அணையில் நேற்று காலை நிலவரப்படி 4 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. 193 அடி தண்ணீர் உள்வரத்து உள்ளது. 337 கன அடி தண்ணீர் விவசாயத்திற்கு திறந்து விடப்படுகிறது.நிலமை இவ்வாறு நீடிக்குமானால் பேச்சிப்பாறை அணையின் தண்ணீர் வெளியேற்ற முடியாத அளவிற்கு வற்றிப்போகும் நிலை உருவாகும்.
கடந்த 2004ம் ஆண்டு தண்ணீர் 4 அடி அளவில் வந்த போது அணைப்பகுதியில் மழை பெய்து தண்ணீர் பெருக விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மழைக்காக யாகம் நடத்தப்பட்டது.தற்போது அணையின் நீர் மட்டம் 4 அடிக்கும் குறைவான நிலையில் அதிகாரிகளோ, விவசாயிகளோ இதற்கான எந்த முயற்சியும் எடுப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் அணையில் நீர்மட்டம் 5 அடிக்கும் குறைவானதும் தொடர்ந்து மழை ஏமாற்றி வருவதை கண்டு முன் கால மரபுப்படி மழைக்கான சிறப்பு பூஜை மேற்கொள்ள பேச்சிப்பாறை அணை அடிவாரத்தில் உள்ள பேச்சியம்மன் கோயில் நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து தேவியின் அனுமதி பெற இரண்டு நாட்களுக்கு முன் சிறப்பு பூஜையும், அணையின் எதிர் பகுதியில் சுமார் இரண்டாயிரம் அடிக்கும் உயரமான மலை உச்சியில் சிறப்பு வழிபாடுகளும் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை பேச்சியம்மன் கோயில் சன்னதியில் கணபதி ஹோமம், நவஅபிஷேகம் நடந்தது.தொடர்ந்து கலசபூஜை, லட்சார்ச்சனை நடந்தது. கணபதி மற்றும் பேச்சியம்மனுக்கு பால், இளநீர், களபம் அபிஷேகம், மதியம் அன்னதானம் நடந்தது. காலை முதல் சிறப்பு பூஜைகள் செய்த குங்குமம் தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அபிஷேக பிரசாதத்தை கோயில் மேல் சாந்தி செந்தில்முருகன், ஜோசியர் திரவியம் தலைமையில் கோயில் நிர்வாகிகள் அணை தண்ணீரில் சமர்ப்பித்தனர். அணை தண்ணீரின் அளவு அதிகளவு குறையும் போது அணை தண்ணீரை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு மட்டுமல்லால் அணையின் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு அம்மனை திருப்திபடுத்தும் விதமாக பூஜைகள் செய்துள்ளோம்.இதற்கு அணை தண்ணீரை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளோ, அதிகாரிகளோ எந்த ஒத்துழைப்பும் தரவில்லை என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.