சுறுசுறுப்பாக உணவு சேகரிக்கும் வேலையை செய்து கொண்டிருந்தது எறும்பு. அதைப்பார்த்த வெட்டுக்கிளி, ‘‘என்னப்பா நீ... எப்ப பாத்தாலும் வேலை பாத்துக்கிட்டே இருக்க. என்னையப்பாரு. நான் எப்படி ஜாலியா இருக்கேன்’’ என கிண்டல் செய்தது. ஆனாலும் இதை துளிகூட பொருட்படுத்தவில்லை எறும்பு. ஒருநாள் மழை கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தது. உணவு தேட வெளியே செல்லமுடியாமல் தவித்தது வெட்டுக்கிளி. இப்படி சில நாட்கள் கடந்தன. மழை நின்றபாடில்லை. அருகே இருந்த எறும்பு புற்றிற்கு சென்ற வெட்டுக்கிளி, ‘‘நண்பா... எப்பத்தான் மழை நிற்கும் என்று தெரியலேயே.. பசி வயிற்றை கிள்ளுகிறது. நீ எப்படி சமாளிக்கிறாய்’’ எனக்கேட்டது. ‘‘ஹூம்... எனக்கென்னப்பா கவலை. நான் முன்பு சேமித்தது இப்போ கைகொடுக்குது. இந்தா நீயும் கொஞ்சம் எடுத்துக்கோ’’ என உணவை கொடுத்தது எறும்பு. அவமானத்தால் தலை குனிந்த வெட்டுக்கிளியால் அதை வாங்கக்கூட முடியவில்லை. பார்த்தீர்களா.. இதுதான் உழைப்பின் உன்னதம். எப்போதும் வேலை செய்து கொண்டே இருங்கள். நிச்சயம் அதற்கான வெகுமதி ஒருநாள் கிடைக்கும்.