பதிவு செய்த நாள்
02
ஆக
2022
07:08
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. பக்தர்களின் கோவிந்தா, கோபாலா கோஷம் விண்ணதிர பக்தர்கள் வெள்ளத்தில் ஆண்டாள் தேர், ஆடி அசைந்து வந்தது பக்தர்களை பரவசமடைய செய்தது.
இக்கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா ஜூலை 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பகலில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபங்கள் எழுந்தருளினர். இரவில் வாகன புறப்பாடு நடந்தது. பெரியாழ்வார் மங்களாசாசனம், ஐந்து வருட சேவை, ஆண்டாள் ரெங்கமன்னார் சயனசேவை விழாக்கள் வெகு சிறப்புடன் நடந்தது. விழாவின் ஒன்பதாம் திருநாளான நேற்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் தேரில் எழுந்தருளினர். அங்கு கோயில் பட்டர்கள் திருமஞ்சனம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்தனர். காலை 09:05 மணிக்கு தேரினை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியை தமிழக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு கொடி அசைத்து துவக்கி வைத்தனர். எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜபாளையம் தங்கபாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் மான்ராஜ், சிவகாசி மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா, கலெக்டர் மேகநாதரெட்டி, தக்கார் ரவிச்சந்திரன் நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன், அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, உதவி ஆணையர் வளர்மதி மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கோவிந்தா, கோபாலா கோஷம் விண்ணதிர பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தின் நடுவே நான்கு ரத வீதிகளிலும் தேர் ஆடி அசைந்து சுற்றி வந்து காலை 11:35 மணிக்கு நிலையம் சேர்ந்தது. பின்னர் பக்தர்கள் தேரில் ஏறி தரிசனம் செய்தனர். விருதுநகர் எஸ்.பி. மனோகர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மருத்துவம், தீயணைப்பு துறையினர் தேரின் பின் தொடர்ந்தனர். கொரோனா காரணமாக இரண்டு வருடத்திற்கு பிறகு தேரோட்டம் நடந்ததால் வழக்கத்தை விட மிகவும் அதிகமாக, நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் கடல் அலை போல் காணப்பட்டது.