திருப்பதி திருமலையில், பெருமாளுக்கு ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வான் தன் மனைவியுடன் பூந்தோட்டம் அமைத்தார். அப்போது, அவர் மனைவி கர்ப்பமாக இருந்தார். அவர்கள் குளம் வெட்டத் தொடங்கினர். கர்ப்பிணி பெண், மிகுந்த சிரமத்துடன் தனக்காக மண் சுமப்பதைக் கண்ட ஏழுமலையான், ஒரு சாதாரண மனிதனைப் போல வந்து உதவினார். “எங்களுக்கு யாரும் உதவ வேண்டாம்! பெருமாளுக்கு நாங்களே தொண்டு செய்ய விரும்புகிறோம்,” என்ற அனந்தாழ்வான் கடப்பாறையால் வந்தவரை அடிக்க ஓங்கினார். கடப்பாறை, பெருமாளின் உதட்டின் கீழே பட்டு ரத்தம் வந்தது. அப்போது, அவர் தன் உண்மை வடிவைக் காட்ட, அனந்தாழ்வான் வேதனையில் துடித்தார். உதட்டுப் புண்ணுக்கு மருந்திட்டார். இதன் நினைவாக, இப்போதும் கூட, வெங்கடாஜலபதியின் உதட்டுக்கு கீழே (மோவாய்) பச்சை கற்பூரத்தை மருந்தாக சாத்துவது வழக்கம்.