பதிவு செய்த நாள்
16
ஆக
2022
08:08
புதுடில்லி : இந்தியாவை ஹிந்து தேசமாகவும், வாரணாசியை தலைநகராகவும் அறிவிக்கக் கோரி, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஹிந்து மத துறவிகள் மற்றும் அறிஞர்கள் குழு, வரைவு அறிக்கை தயார் செய்துள்ளது.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசியில், சங்கராச்சாரியா பரிஷத் என்ற ஹிந்து மத அமைப்பு உள்ளது. இந்த அமைப்பை சேர்ந்த துறவிகள் மற்றும் அறிஞர்கள் ஒன்றிணைந்து, சட்ட நிபுணர்களின் உதவியுடன், வரைவு அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளனர். அதன்படி, இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிக்கவும், புதுடில்லிக்கு பதில், வாரணாசியை தலைநகராக அறிவிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாரணாசியில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கும் மகா மேளா விழாவின் போது, ஹிந்து மத அமைப்புகள் நடத்தும், தர்ம சன்சத் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், இந்த வரைவு அறிக்கையை தாக்கல் செய்து, விரிவாக விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்களிடமும் இந்த வரைவு அறிக்கை குறித்து கருத்து கேட்க திட்டமிடப்பட்டுள்ளது.