வீட்டுக்குப்பின்னால் இரண்டடி பாம்பை அடித்துக் கொன்றார் விவசாயி. தன் மனைவி, மகனிடம் மூன்றடி பாம்பை கொன்றேன் என்றார். அதைக்கேட்ட அவரது மனைவி பக்கத்துவீட்டுப்பெண்ணிடம் ஐந்தடி பாம்பை தனியாவே என்கணவர் கொன்றார் என பெருமை பேசினாள். அவளோ பக்கத்து தெருவிலுள்ள தோழியிடம்,‘‘எங்கள் தெருவில் ஒருவர் பத்தடி பாம்பைக் கொன்றார்’’ என கூறினாள். அதைக்கேட்ட தோழி, ஊரிலிருந்து வந்த உறவினரிடம், ‘‘எங்கள் ஊர்க்காரர் இருபதடி பாம்பை சாகடித்திருக்கிறார்!’’ என்று தம்பட்டம் அடித்தாள். இதை எல்லாம் அவ்வூருக்கு வந்திருந்த ஞானி ஒருவர் கவனித்து கொண்டிருந்தார். விவசாயிடம் இருபதடி பாம்பை அடித்துக்கொன்றீர்களா என கேட்டார். அவரும், இவருக்கு என்ன தெரியும் என அலட்சியமாக நினைத்து பெருமையை விட்டுக்கொடுக்காமல் ஆம் என்றான். ஞானியோ, விவசாயி மகனிடம் இருபதடி பாம்பைக் கொன்றாராமே அது உண்மையா எனக்கேட்டார். ஆனால், அவனோ “செத்த பாம்பு இரண்டடிதான். எப்படி இருபது அடி வளருமா ” என கேட்டான். அந்தப் பையனைப்போல நீங்களும் உண்மையை ஆராய்ந்திருந்தால் வீண்வதந்தியை பரப்ப நேர்ந்திருக்காதே என ஊர் மக்களை பார்த்துச் சொன்னார் ஞானி. மக்கள் அனைவரும் தலை குனிந்தனர்.