பதிவு செய்த நாள்
05
செப்
2022
07:09
மேட்டுப்பாளையம்: சுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம், பவானி ஆற்றின் கரை ஓரத்தில், மிகவும் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடைசியாக, 1984ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது. அதன் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. கோவிலில் மூலவர் சன்னதியின் இரு பக்கம் சிவன், அம்பாள், சன்னதிகளும், நவகிரகங்களும், அர்த்தமண்டபம், தியான மண்டபம் ஆகிய மண்டபங்கள் புதிதாக அமைக்கப்பட்டன. பின்பு, 38 ஆண்களுக்கு பிறகு, இன்று (5ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. யாக பூஜைகளை குமரகுரு சுவாமிகள் துவக்கி வைத்தார்.
நேற்று புதிய சுவாமி சிலைகளுக்கு கண் திறந்து, கோபுர கலசங்கள் அமைத்து, கோ பூஜை செய்யப்பட்டது. இன்று (5ம் தேதி) காலை, 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், தொடர்ந்து, 6:40 மணிக்கு தீர்த்த கலசங்கள் ஆலயத்தை வலம் வருதலும், பின்பு மூலவர் மற்றும் பரிவார விமானங்களுக்கும், ராஜகோபுரத்திற்கும், மூலவர் சுப்ரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற உள்ளது. மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவமும், 7:00 மணிக்கு திருவீதி உலாவும் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைத்துறை துறையினரும், திருமுருக வழிபாட்டு குழுவினரும் செய்து வருகின்றனர்.