பதிவு செய்த நாள்
13
செப்
2022
06:09
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாலுகா விளாச்சேரியில் நவராத்திரிக்காக பெரிய அளவில் கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன.
அங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சீசனுக்கு தகுந்தாற் போல் சுவாமி சிலைகள், அரசியல் தலைவர்களின் சிலைகள், பொம்மைகள், மூன்று இன்ச் முதல் 15 அடி வரை உயரம் வரை களிமண் விநாயகர் சிலைகள், இரண்டரை அடி உயர மெகா சைஸ் அகல் விளக்குகள், கிறிஸ்து குடில்கள் ஆகியன களிமண், காகித கூழ், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சிமென்ட் மூலம் தயாரிக்கின்றனர். இங்கு தயாராகும் பொம்மைகள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கின்றன. ராமலிங்கம் கூறுகையில்: பரம்பரை பரம்பரையாக பொம்மைகள் தயாரிக்கும் தொழிலில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகிறோம். நவராத்திரிக்காக வழக்கமாக தயாரிக்கப்படும் கொலு பொம்மைகளுடன் இந்த ஆண்டு புதிதாக பெருமாள் ஊஞ்சல் செட், மைசூர் தசரா செட், ராமகிருஷ்ண பரமஹம்சர், புத்தர், பிரதோஷ செட், வளைகாப்பு செட், சந்திரலேகா செட், மாயாபஜார், அஷ்டவராஹி, நவதுர்க்கை, வைபோகலட்சுமி, கிருஷ்ண லீலா, ராமர் ஆஞ்சநேயர் ஆகியன 3 இன்ச் முதல் நான்கரை அடி உயரம் வரை காகித கூழால் தயாரித்து உள்ளோம். சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு களிமண், காகிதகூழ் ஆகியவற்றால் மட்டுமே சிலைகள் தயாரிக்கிறோம்.
வீட்டு அலங்காரத்திற்கான பொம்மைகளும் தயாரித்து கொடுக்கிறோம் . தமிழகத்தின் பெரும்பாலான கோயில்கள், காதி விற்பனையகங்களில் இச்சிலைகள் விற்பனைக்கு உள்ளன. வெளிமாநிலத்தினருக்கு ஆர்டரின் பேரில் பொம்மைகள் தயாரித்து கொடுக்கிறோம். கொரோனாவிற்கு பின்பு இந்த ஆண்டு புதிதாக கொலு வைப்பவர்கள் ஏராளமானோர் பொம்மைகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். வியாபாரிகளும் அதிக அளவில் வருகின்றனர். இதனால் விற்பனை சூடு பிடித்துள்ளது என்றார்.