பதிவு செய்த நாள்
23
செப்
2022
06:09
நாகப்பட்டினம்: ஆதரவற்ற நிலையில் இறந்த 3 ஆயிரம் நபர்களை தனி மனிதராக அடக்கம் செய்த சமூக சேவகர், மகாளய பட்சத்தை முன்னிட்டு, ஆதரவற்ற முன்னோர்களுக்கு உறவாக ஒரே இடத்தில் ஐதீக முறைப்படி திதி அளித்த நிகழ்வு நாகையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பூவுலகில் பிறக்கும் எந்த மனிதனும் ஆதரவற்றவனாக இல்லாதப் போது, சந்தர்ப்ப சூழலால், ஆதரவற்றவர்களாகி இறந்து போகும் நிலையில், அவர்களுக்கு உறவாக மாறி உறவுகள் நிறைவேற்ற வேண்டிய இறுதி கடமையை தனிமனிதனாக, எவ்வித எதிர்பார்ப்புமின்றி செய்து வருபவர் நாகையை சேர்ந்த ராஜேந்திரன்,64. சாதி, மதம் பாராமல் கடந்த 2012 ம் ஆண்டு முதல் துவங்கிய இவரது தன்னலமற்ற சேவையில், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டவர்கள், கட்டிய மனைவியே அருகில் வர அச்சப்பட்ட கொரோனா நோயாளிகள், கொடிய நோயால் இறந்தவர்கள் போன்ற பல்வேறு காரணங்களால் இறந்து கிடந்தவர்களை,மற்றவர்கள் நெருங்கி வரக்கூட அருவருக்கும் நிலையில் தனி ஆளாக சுமந்து பிணவறைக்கு எடுத்துச் சென்று பாதுகாத்து, அனைவரும் சமம் என ஹிந்து முறைப்படி அடக்கம் செய்து வருகிறார்.
இந்நிலையில் 25 ம் தேதி மகாளய அமாவாசை வருவதோடு, அதற்கு முந்தைய 15 நாட்கள் மகாளய பட்சம் என்பதால், தான் அடக்கம் செய்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னோர்களுக்கும், உறவாக இருந்து ஒரே இடத்தில் திதி அளிக்க முடிவு செய்த ராஜேந்திரன், நாகை புதிய கடற்கரையில், ஐதீக முறைப்படி தமது குடும்பத்தினருடன் திதி அளித்தார். ராஜேந்திரன் கூறுகையில், பித்ருலோகத்தில் இருக்கும் முன்னோர்கள் மகளாய பட்ச நாட்களில் பூவுலகத்திற்கு வருவார்கள். ஆத்மாக்களுக்கு அவரது உறவினர்கள் திதி அளித்து ஆத்மாக்களை புண்ணியம் அடைய வைப்பார்கள். ஆதரவற்ற நிலையில் மறைந்த ஆத்மாக்களும் வரும். உறவுகள் இல்லாததால் அந்த ஆத்மாக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் என்பதால், ஆதரவற்ற ஆத்மாக்களுக்கும் நானே உறவு என்ற முறையில், ஆதரவற்ற நிலையில் இறந்த 3 ஆயிரம் நபர்களின் புகைப்படங்களை வைத்து, ஐதீக முறைப்படி தர்ப்பணம் அளிக்கப்பட்டது என்றார்.