பதிவு செய்த நாள்
21
ஆக
2012
03:08
பாரதப்போரின் போது, தர்மம் நிலைக்க தனது உயிரைவிட்டவன் அரவான். போர் களத்திற்கு செல்லும் முன், தடையின்றி வெற்றி பெற காளிக்கு களப்பலி கொடுப்பது அக்கால அரசர்களின் வழக்கம். பாண்டவர்கள் போரில் வெல்ல வேண்டுமானால், சாமுத்திரிகாலட்சணம் கொண்ட ஒருவனை களபலி கொடுக்க வேண்டும், அவன் தானே மனமுவந்து உயிரைத் தருபவனாக இருக்க வேண்டும், என கண்ணனிடம் ஜோதிட கலைஞன் சகாதேவன் கூறினான். சாமுத்திரிகா லட்சணம் கொண்டவர்கள் பாண்டவர்களில் இருவர் தான் இருந்தனர். ஒருவன் அர்ச்சுனன். அவனைக் களப்பலி இட முடியாது. காரணம் அவன் தான் போரின் மையமாக இருப்பவன். அடுத்து அரவான். அவன் நாக கன்னிகைக்கும் அர்ச்சுனனுக்கும் பிறந்தவன். அரவான் முழு மனதுடன் களப்பலிக்குச் சம்மதித்தான். ஆனால், இருநிபந்தனைகள் விதித்தான். கண்ணா! நான் திருமணமாகாதவன். ஒரு அழகிய பெண்ணை மணமுடித்து இன்றிரவு அவளுடன் வாழ வேண்டும். என் தலை கொய்யப்பட்ட பிறகும், பாரதப்போர் முடியும் வரை என் கண்களால் காண வேண்டும், என்றான். ஒரு நாள் வாழ எந்த பெண் சம்மதிப்பாள். எனவே ஆண்மகனான கண்ணனே, அழகிய பெண்ணாக மாறி, அரவானை மணந்து ஓர் இரவு வாழ்ந்தார். மறுநாள் அரவான் களப்பலியானான். இந்த புராண நிகழ்ச்சியைத் தான், விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் 18 நாட்கள் விழாவாக நடத்துவர். கடைசி நாளன்று அரவான் களப்பலி நடக்கும். இக்கோயிலில் பரிவார தெய்வங்கள் இல்லை. கருவறையில் ஒரு ஊஞ்சலில் அரவான் தலைமட்டும் உள்ளது. அதற்கு தினம் இருகால பூஜை செய்கின்றனர். சித்ராபவுர்ணமிக்கு முதல் நாள் இரவு, திருநங்கைகள் தங்களை மணமகளாக அலங்கரிப்பர். அரவான் சார்பில், பூஜாரி அனைவருக்கும் தாலி கட்டுவார். இரவு முழுவதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். மறுநாள் அரவான் பலியானதும் எல்லோரும் தங்களை பெண் கண்ணனாக பாவித்து, தாலியைக் கழற்றிவிட்டு அழுவர். இவ்வாண்டு மே 1ல் தாலி கட்டும் நிகழ்ச்சியும், 2ல் அகற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது.