கம்பம்: கம்பம் பகுதியில் உள்ள கோயில்களில் இந்தாண்டு நவராத்திரியை முன்னிட்டு கொலு வைப்பதில் கலக்கி வருகின்றனர்.
பக்தர்களும் குறிப்பாக பெண்கள் கொலு பார்ப்பதற்கு அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். நவராத்திரி விழா என்பது அசுரர்களை அழிக்க 9 இரவுகள் பெண் தெய்வங்கள் கடும் விரதம் இருந்து, துர்க்கையை வழிபட்டு அசுரர்களை அழிப்பார்கள். நவராத்திரி விழாவில் கொலு வைத்தல் சிறப்பம்சமாகும். கடந்த சில ஆண்டுகளாக கோவிட் காரணமாக நவராத்திரி விழாவில் கொலு வைக்கப்படவில்லை. இந்தாண்டு கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில், கவுமாரியம்மன் கோயில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில், சின்னமனூர் சிவகாமி அம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கொலு வைக்கப்பட்டுள்ளது. கலாச்சாரம், ஆன்மிகம், பண்பாடு, அறிவியல் போன்றவற்றை விளக்கும் வகையிலும், மண்வளம் காப்போம், மரம் வளர்ப்போம், நெகிழி பயன்பாட்டை அழிப்போம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் கொலு அமைக்கப்பட்டுள்ளது. கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் சஷ்டி மண்டபத்தில் பல பிரிவுகளாக வைக்கப்பட்டுள்ளது.