மானாமதுரையின் பழமையான பெயர் இடம் பெற்ற கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2022 03:09
மானாமதுரை: மானாமதுரை அருகே துலுக்கனேந்தல் கண் மை பகுதியில் மானாமதுரையின் பழமையான பெயர் இடம்பெற்ற கல்வெட்டு வரலாற்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வாடி அருகே துலுக்கனேந்தல் கண்மாய்க்கு கிழக்கே வயல் பகுதியில் சுமார் 400 வருடத்திற்கு முற்பட்ட கல்வெட்டுடன் கூடிய திருவிடையாட்டம் என்று சொல்லக்கூடிய தானக்கல் உள்ளதாக வாடி வில்லிபுத்திரியேந்தலைச் சேர்ந்த வயலூர் குமரன் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன், க.புதுக்குளத்தைச் சேர்ந்த சிவக்குமார் ஆகியோர்அங்கு சென்று கள ஆய்வு செய்தபோது,
நாயக்கர் காலத்தில் பெருமாள் கோவிலுக்கு வழங்கப்பட்ட தானநிலத்தை குறிக்கும் விதமாக தமிழ் எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது என்றும் இது குறித்து அவர்கள் கூறுகையில், பொதுவாக முற்காலங்களில் மன்னர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட நிலங்களை கோவில்களுக்கோ,தனிநபர்களுக்கோ தானம் வழங்குவது ஒரு மரபாக பின்பற்றி வந்துள்ளனர்.அவ்வாறு வழங்கும் நிலங்கள் சைவ கோவில்களுக்கு வழங்கும் நிலங்களை தேவதானம் என்றும் வைணவ கோவில்களுக்கு வழங்கும் தானம் திருவிடையாட்டம் என்றும் கூறுவர். மேலும் நாம் கண்டுபிடித்த தான கல்லிலும் திருவிடையாட்டம் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கல் ஒரு அடி அகலமும் 3 அடி நீளமும் கொண்டதாகும்.
மானாமதுரையின் பழமையான பெயர் வானவீரன்மதுரை ஆகும்.இந்த கல்வெட்டில் 4வரிகள் எழுதப்பட்டு உள்ளது.அதில் "வானவீரன்மதுரை அழகர் திருவிடையாட்டம்" என்று பொறிக்கப்பட்டுள்ளது.மேலும் கல்லின் நான்கு புறத்திலும் சக்கரம் கோட்டோவியமாக செதுக்கப்பட்டுள்ளது, கல்வெட்டு வாசகத்தின்படி மானாமதுரையின் பழமையான பெயரான வானவீரன் மதுரை என்ற பெயரே மருவி மானாமதுரை என்று மாறியுள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும்.மேலும் அழகர் திருவிடையாட்டம் என்றும் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் மானாமதுரையில் உள்ள அழகர் கோவிலுக்கு நிலதானம் வழங்கியதை இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது.மேலும் இந்த கல்வெட்டை ஆராய்ச்சி செய்ததன் மூலம் இப்பகுதி நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் இருந்துள்ளதையும் நாம் அறியலாம் என்றும் கூறினர்.