பதிவு செய்த நாள்
30
செப்
2022
06:09
மேட்டுப்பாளையம்: தென்திருப்பதி கோவிலில், நவராத்திரி பிரம்மோற்சவம் விழாவில், சிம்ம வாகனத்தில் மலையப்பசாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சிறுமுகை ஆலங்கொம்பு அருகே, தென் திருமலையில் தென் திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி பிரம்மோற்சவ விழா, நடைபெற்று வருகிறது. தினமும் ஒவ்வொரு வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி, திருவீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் நான்காவது நாளான நேற்று காலை, சிம்ம வாகனத்தில் யோக நரசிம்ம கோலத்தில் மலையப்பசுவாமி, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அக்., 1ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலையை, மலையப்ப சுவாமிக்கு அணிவித்து சிறப்பு பூஜை செய்ய உள்ளனர். அன்று இரவு, 7:30 மணிக்கு கருட சேவையும், இரண்டாம் தேதி காலை அனுமந்த வாகனத்தில் திருவீதி உலாவும், மாலையில் தங்க ரதத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. அக்., 4ம் தேதி காலை, 8:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார். அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கே.ஜி., குரூப் சேர்மன் பாலகிருஷ்ணன், மற்றும் கே.ஜி. டெனிம், கண்ணபிரான் மில்ஸ் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.