பதிவு செய்த நாள்
09
அக்
2022
07:10
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் ஸ்ரீ நடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு புரட்டாசி மாத மகாபிஷேகம் நேற்று இரவு வெகுசிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீநடராஜர் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி,மார்கழி, மாசி, மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாகும். ஆனித்திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். சிதம்பரம் நடராஜர் கோயிலில், உலக நன்மை கருதி நேற்று காலை ஸ்ரீ ருத்ர ஜப பாராயணங்களை நிறைவு செய்த பின்னர் புரட்டாசி மாத மகாபிஷேகம், சித்சபை முன்பு உள்ள கனகசபையில் நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு விபூதி பால்,தயிர்,தேன், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம் புஷ்பம், உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். முன்னதாக அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு உச்சிகால பூஜை வரை நடைபெற்று ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்தியை கனகசபைக்கு எழுந்தருள செய்து மந்த்ர அச்க்ஷதை லட்சார்ச்சனை நடைபெற்றது. பின்னர் நடனபந்தலில் யாக சாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ருத்ர ஜபம் மற்றும் ருத்ர கிரம அர்ச்சனை செய்து, மகா ருத்ர ஜபம் மற்றும் ருத்ர கிரம அர்ச்சனை செய்து, மகா தீபாராதனை நடைபெற்றது. மதியம் மஹாருத்ர மகா ஹோமமும், . பினனர் கலசங்கள் யாத்திராதானம் செய்யப்பட்டு மாலை நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேகம் நடைபெற்றது. மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் கமிட்டி செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.