ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத விழா: ஆடுகள் பலியிட்டு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2022 08:10
கமுதி: கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் உள்ள எல்லைபிடாரி அம்மன் பீடத்திற்கு ஆடுகள் பலியிட்டு ஆண்கள் மட்டும் வினோத வழிபாடு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் உள்ள கண்மாய் கரையில் எல்லைப்பிடாரி அம்மன் பீடம் உள்ளது. இங்கு 3 தலைமுறைகளாக புரட்டாசி மாதம் மூன்றாவது வாரத்தில் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத விழா நடக்கிறது. இங்கு 5 ஆண்களோடு பிறந்த பெண் ஒருவர் துன்புறுத்தப்பட்டு வீட்டிலிருந்து வெளியே வந்து மாயமானார். பின்னர் முதல்நாடு கிராம மக்களின் கனவில் வந்து தங்கள் ஊர் எல்லையில் இருந்து தெய்வமாக காப்பாற்றுவேன் எனவும் தன்னை ஆண்கள் மட்டும் ஆண்டுக்கு ஒரு நாள் ஆடுகள் பலியிட்டு வழிபாடு செய்ய வேண்டும், அப்பகுதிக்கு பெண்கள் வரக்கூடாது என்றும் கூறியதாக நம்பப்படுகிறது.
இந்தஆண்டு புரட்டாசி மாதம் மூன்றாம் வாரத்தில் ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத வழிபாடு பீடம் அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு கைகுத்தல் பச்சரிசி சாதம் உருண்டை செய்து 51 ஆடுகள் பலியிட்டு படையல் இடப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்புபூஜை நடந்தது. படையல் இட்ட உணவு பனைஓலையால் செய்த மட்டையில் பரிமாறப்பட்டது. இங்குள்ள எந்த பொருளையும் பெண்கள் பார்க்க கூடாது என்பதால் மீதமிருந்த சாப்பாடு, விபூதி, பூஜைபொருட்கள் அனைத்தும் குழித்தோண்டி புதைக்கப்பட்டது. இத்திருவிழாவில் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து 3000க்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்று எல்லை பிடாரி அம்மனை வழிபட்டனர்.