பதிவு செய்த நாள்
13
அக்
2022
03:10
பழநி: பழநியில் பதினாறாம் நூற்றாண்டு சேர்ந்த செப்பேட்டை ஆய்வு செய்ததில் பண்டாரங்களில் சிறப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
பழநியில் செப்பேட்டை சத்தியன் பாதுகாத்து வைத்திருந்தார். பதினாறாம் நூற்றாண்டு சேர்ந்த இச்செப்பேட்டில் எழுதப்பட்ட விவரங்கள் அறிய தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்தார். செப்பேடு குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவிக்கையில், "விஜயநகர அரசர் வெங்கடநாயக்கர் ஆட்சி காலத்தில் இச்செப்பேடு எழுதப்பட்டது தெரிய வந்தது. இதில் கலியுக சகாப்தாண்டு தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதும், சாலி மூல மார்க்கண்டேய கோத்திரத்தை சேர்ந்த பண்டாரங்களால் எழுதப்பட்டதும் தெரியவந்தது. செப்பேடு 1597 ஆம் ஆண்டு ஜன., 26க்கு நிகரான நாட்களில் எழுதப்பட்டது கண்டறியப்பட்டது.
28 செ.மீ., உயரமும் 17 செ.மீ., அகலமும் உள்ள செப்பேட்டில் முருகன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முருகன் வலது கையில் அருள் தருவது போலும், இடக்கை முத்திரையோடும் உள்ளது. முருகனின் வலது புறம் வேல் உள்ளது போல் வரையப்பட்டுள்ளது. பாம்பை மிதித்த மயில் வரையப்பட்டுள்ளது. மேலும் பழநி பகுதியில் கிடைக்கும் செப்பேடுகளில் உள்ளது போல் "வைய நீடுக" என செப்பேடு துவங்கியுள்ளது. முருகனின் சிறப்புகள் குறித்து மூன்று பாடல்கள் உள்ளது. விஜயநகர பேரரசர்களான மல்லிகார்ஜுன ராயர் முதல் வெங்கட ராயர் வரை குறிப்பிடப்பட்டுள்ளது. சாலி மூல மார்க்கண்டேய கோத்திர பண்டாரங்களில் சிறப்புகளான சொல் இரண்டு உரையாதவர்கள், 56 தேசத்திலும் சமய செங்கோல் புரிந்து வாழ்பவர்கள், ஹோம குண்டம் உருவாக்கியவர்கள், கரிகால சோழனின் பிரியத்திற்கு உரியவர்கள், சோழப்பேரரசின் வலக்கை பிரிவை சேர்ந்தவர்கள் என புகழப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு சண்முக நதியில் திருப்மஞ்சனம், திருமாலை, வில்வ அர்ச்சனை, கட்டளைக்கு ஒரு பணமும், கல்யாணத்திற்கு இரண்டு பணமும், காதுகுத்திற்கு ஒரு பணமும் மற்றும் பாக்கு, வெற்றிலை, படியரிசியும் 56 தேச பண்டாரங்களும் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது." என்றார்.