பதிவு செய்த நாள்
14
அக்
2022
07:10
திருப்பதி: வரும் அக்டோபர் 25 ம் தேதி சூரிய கிரகணமும் மற்றும் நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணமும் நிகழ இருப்பதால் அந்த நாட்களில் திருமலை திருப்பதி கோயில் நடை 12 மணி நேரம் அடைக்கப்பட்டிருக்கும். அக்டோபர் 25 ஆம் தேதி மாலை 5:11 மணி முதல் 6:27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும்,அன்றைய தினம் காலை 8:11 மணி முதல் இரவு 7:30 மணி கதவு மூடப்பட்டிருக்கும் அதன் பின் அதற்கான சுத்தி மேற்கொண்ட பிறகு மீண்டும் திறக்கப்படும்.
இதேபோல், நவம்பர் 8-ஆம் தேதி மதியம் 2:39 மணி முதல் மாலை 6:19 மணி வரை சந்திர கிரகணம் நிகழும் , கிரகண நாளில், கோயில் கதவுகள் காலை 8:40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7:20 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். இந்த இரண்டு நாட்களிலும் விஐபி பிரேக் தரிசனம், கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, பிரம்மோத்ஸவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவைகள் போன்ற ஆர்ஜித சேவைகளை கோயில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. மூத்த குடிமக்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் கைக்குழந்தைகளுடன் உள்ள பெற்றோர்கள், என்ஆர்ஐக்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட சலுகை பெற்றவர்களின் தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு நாட்களிலும் வைகுண்ட வாசல் வழியாக கோவில் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு சர்வ தரிசன யாத்ரீகர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.கிரகண நாட்களில், சமையல் செய்ய கூடாது என்பதால் அன்னபிரசாத கூடமும் மேற்குறிப்பிட்ட நேரம் மூடப்பட்டிருக்கும். அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 8 ஆகிய இரு கிரகண நாட்களில் இந்த விஷயங்களைக் குறித்துக் கொண்டு, திருமலைக்கு தங்கள் யாத்திரையைத் திட்டமிடுமாறு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடப்படுகிறது.