பதிவு செய்த நாள்
25
அக்
2022
09:10
அவிநாசி: தீபாவளி திருநாளில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் திரண்டர்; சுற்றுலா தளம் போல், கோவில் காட்சியளித்தது.
புத்தாடை அணிந்து, விதம், விதமாய் உணவு சமைத்து, வண்ணமயமாய் பட்டாசு வெடித்து தீபாவாளியை கொண்டாடினாலும், சில மணித்துளிகள் இறைவன் திருவடியில் நேரம் கழித்தால் மட்டுமே விழா கொண்டாடுவதன் மனநிறைவு கிடைக்கும். அந்த வகையில் தீபாவளி திருநாளான நேற்று, காசியில் பாதி அவிநாசி எனப்புகழப்படும். அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். புத்தாடை அணிந்து, குடும்பம், குடும்பமாய் கோவிலுக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, இறைவனை தரிசித்து சென்றனர். கோவிலின் வெளியிலும், உட்புறமும் விளக்கேற்றி, தங்களின் வேண்டுதலை... நிறைவேற்றினர். சிறு குழந்தைகள் முதல், இளைஞர்கள், இளம் பெண்கள், பெரியவர்கள், முதியவர்கள் என, ஆன்மிக நம்பிக்கையில் கட்டுண்ட பலரும், இறைவனின் திருவடியில் மனம் லயிக்க பிரார்த்தனை செய்தனர்.
வட மாநிலத்தவர் உற்சாகம்!
அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில், ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் நிலையில், பலர், தங்கள் சொந்த ஊர் செல்லவில்லை. இங்கேயே தீபாவளி கொண்டாடினர். வட மாநி பெண் தொழிலாளர்கள் பலர், தமிழ் கலாசாரப்படி புடவையுணிந்து கோவிலுக்கு வந்தனர். அவர்கள் மட்டுமின்றி, கோவிலுக்கு வந்த உள்ளூர்வாசிகள் உட்பட பலரும், பழமை வாய்ந்த கோவிலில் ஆங்காங்கே நின்று, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். வெளியூரைச் சேர்ந்த பக்தர்களும், அதிகளவில் வந்து சென்றனர். சுற்றுலா தளம் போன்று, கோவில் வளாகம் காட்சியளித்தது. பக்தர்கள் வருகையால், கோவில் முகப்பில் கார்களும், டூவீலர்களும் நிரம்பியிருந்தன.