தாளவாடி அருகே வினோத திருவிழா ஒருவர் மீது ஒருவர் சாணியடித்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2022 06:10
ஈரோடு : தாளவாடி அருகே ஒருவருக்கொருவர் சாணியடித்து வினோத விழா கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கும்டாபுரத்தில் 300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் தீபாவளி பண்டிகையில் இருந்து 3-வது நாள் வினோதமான சாணியடி திருவிழா நடைபெறும். அதாவது திருவிழாவின் முதல்நாளே கோவில் அருகே உள்ள ஒரு இடத்தில் பசு சாணத்தை கொண்டுவந்து குவித்துவிடுவார்கள். பின்னர் பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் முடிந்தபின்னர் ஒருவர் மீது ஒருவர் சாணத்தை வீசி கொண்டாடுவார்கள். வழக்கம்போல் இந்த ஆண்டு விழா இன்று நடைபெற்றது. முன்னதாக மாடு வளர்ப்பவர்கள் அவரவர் வீடுகளில் இருந்து பசு சாணத்தை கொண்டுவந்து கோவில் அருகே குவித்து இருந்தார்கள். நேற்று காலை ஊர்குளத்தில் இருந்து கழுதை மேல் உற்சவர் சாமி சிலையை வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தார்கள். கோவிலுக்கு சிலை வந்ததும் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதன்பின்னர் ஆண்கள், சிறுவர்கள் மேலாடை அணியாமல் சாணம் கொட்டப்பட்டிருந்த இடத்துக்கு சென்றார்கள். பிறகு ஒருவர் மீது ஒருவர் சாணத்தை உருட்டி வீசி மகிழ்ந்தார்கள். பெண்கள் சாணியடி திருவிழாவில் கலந்துகொள்ள மாட்டார்கள். அதனால் தூரத்தில் நின்று பார்த்து கை தட்டி ரசித்தார்கள். சுமார் 1 மணி நேரம் இந்த சாணியடி திருவிழா நடைபெற்றது. அதன்பின்னர் அனைவரும் ஊர்க்குளத்துக்கு சென்று நீராடிவிட்டு வீட்டுக்கு சென்றார்கள். இதையடுத்து உடைகளை மாற்றிக்கொண்டு மீண்டும் கோவிலுக்கு வந்து சாணியடி திருவிழா நடந்த இடத்தில் கிடந்த சாணியை எடுத்து சென்று தங்களுடைய விளைநிலங்களில் வீசினார்கள். இவ்வாறு செய்தால் அந்த ஆண்டு பயிர்கள் நோய் தாக்காமல் செழிப்பாக வளரும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கையாக உள்ளது.