திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகசாலை பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2022 07:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி திருவிழாவில் தினம் காலை யாகசாலை பூஜை நடக்கிறது. சஷ்டியை முன்னிட்டு அக். 25 முதல் யாகசாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க குடம், வள்ளி, தெய்வானைக்கு வெள்ளி குடங்கள், பரிவார மூர்த்தி களுக்கு வெள்ளி சொம்புகளில் புனித நிரப்பி வைக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, கும்ப பூஜை முடிந்து தீபாராதனைகள் நடக்கிறது.
அக். 31 காலையில் சண்முகருக்கு தங்க குடத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்படும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அக். 29ல் கோயில் பணியாளர்கள் திருக் கண்ணில் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், அக். 30ல் சூரசம்ஹார லீலை, அக்.31ல் சட்டத்தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி கிரிவீதி, ரத வீதியில் தேரோட்டம் நடக்கிறது. கோயிலில் தங்கி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் அன்றைய தினம் மாவிளக்கு வைத்து சஷ்டி விரத்தை முடித்துக் கொள்வர். மாலை 4:00 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தைல காப்பு சாத்துப்படியாகி தயிர் சாதம் படைக்கப்பட்டு பாவாடை நைவேதனை தரிசனம் நடக்கும். சஷ்டி 3ம் திருவிழாவான நேற்று காலையில் சண்முகார்ச்சனை முடிந்து வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகம் கொண்ட சண்முகருக்கு பச்சை பட்டு, மரிக்கொழுந்து மாலைகள் சாத்துப்படயாகி பச்சை நிற அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மயில்வாகனத்தில் புறப்பாடாகினர்.