அறநிலையத்துறை சொத்துக்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2022 05:10
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை டிஜிட்டல் குளோபல் பௌசிஷனிங் சிஸ்டம் முறையில் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை டிஜிட்டல் முறையில் கணக்கெடுத்து அறநிலையத்துறை பெயர் பதிக்கப்பட்ட எல்லைகள் நடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் 1350 கோவிலுக்கு சொந்தமான 24,500 ஏக்கர் நிலங்களில் 14,578 ஏக்கர் நிலங்கள் வருமானம் ஈட்டா சொத்துகளாக உள்ளன. இது தொடர்பான பணிகள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் ஆகியோரால் ஆய்வு செய்யப்பட்டு நில அளவை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக பயிற்சி பெற்ற சர்வேயர் கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவுக்கு ஒரு குழுவும், மயிலாடுதுறை, குத்தாலம் தாலுகாக்களுக்கு மற்றொரு குழுவும் நியமித்து மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை முறைப்படுத்தவும், வருமானம் ஈட்டாமல் உள்ள சொத்துக்களை முறைப்படுத்தி ஏலம் விடுவதற்காகவும் சாட்டிலைட் மூலம் இயங்கும் டிஜிட்டல் குளோபல் பௌசிஷனிங் முறையில் அளவீடு செய்து எல்லைகள் நடும் பணி மயிலாடுதுறை மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பெருஞ்சேரி கிராமத்தில் வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தார் விஜயராகவன் தலைமையில் வீரட்டேஸ்வரர் கோவில் செயலாளர் கோவிந்தராஜன், விஏஓ. ராஜேந்திரன் ஆகியோர் கணக்கெடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தாசில்தார் விஜயராகவன் கூறுகையில் நில அளவை செய்யப்படும் அனைத்து கோவில் நிலங்களும் மென்பொருள் வாயிலாக வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு அவற்றுக்கான அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகை அளவீட்டு எண்கள் பதிவு செய்யப்படுகிறது. இதன் காரணமாக பிற்காலங்களில் எந்த நேரத்திலும் பதிவு குறியீடுகளைக் கொண்டு கோவில் நிலங்களை கண்டறியலாம். கோயில் நிலங்கள் ஆக்கிரமணம் செய்யப்படுவதை எளிதில் கண்டறியலாம். முறையற்ற ஆக்கிரமங்கல்களை அகற்றி கோவில் நிலங்களை மீட்கவும், ஏலம் விடுவதற்காகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் கோவில் நிலங்களை அளவிடும் பணிக்கு நிலத்தை பயன்படுத்தி வருபவர்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.