அன்னூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேக திருப்பணி துவக்க முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2022 05:10
அன்னூர்: அன்னூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு திருப்பணி துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அன்னூர் நகரில், ஓதிமலை ரோட்டில், 300 ஆண்டுகள் பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதேசி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி நாட்களில் திரளான பக்தர்கள் கூடுவர். கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பல சமூகத்தினருக்கு இக்கோவில் குலதெய்வமாக உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் ஆனதையடுத்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த ஆலோசனைக் கூட்டம் பெருமாள் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் நற்பணி மன்ற தலைவர் ராமசாமி தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், விரைவில் திருப்பணி துவக்கி விமர்சையாக கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. கோவிலின் தெற்கு பகுதியில் அனுமதி பெற்று கோவிலுக்கு வருமானம் கிடைக்கும் வகையில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. திருப்பணிக்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தருவோரின் பெயர் கல்வெட்டில் பதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், முன்னாள் அறங்காவலர் ரங்கசாமி, கட்டளைதாரர்கள் நஞ்சப்பன் கருப்புசாமி, தேசிய வித்யாசாலை தலைவர் தேவராஜ், தாசபளஞ்சிக சேவா சங்கத் தலைவர் பரமேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.