பதிவு செய்த நாள்
29
அக்
2022
10:10
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்த, 26ம் தேதி துவங்கியது.மொத்தம் ஆறு நாட்கள் நடக்கும் விழாவில், மூன்றாம் நாளான நேற்று, காலை 8:00 மணி முதல், நண்பகல் 11:00 மணி வரை, மூலவருக்கு சஷ்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும், காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு, காலை 8:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, லட்சார்ச்சனை விழா நடந்தது. மாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சாய்ரட்சை பூஜையும் மற்றும் சிறப்பு தீபாராதனையும் நடந்தன. நேற்று, திருமண முகூர்த்த நாள் மற்றும் கந்தசஷ்டியின் மூன்றாம் நாள் என்பதால், மலைக்கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். பொது வழியில் மூலவரை தரிசிக்க சென்ற பக்தர்கள், மூன்று மணி நேரத்திற்கு மேலாக, நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். முகூர்த்தம் நாள் என்பதால், மலைக்கோவிலில், கோவில் நிர்வாகம் சார்பில், பத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. மண்டபங்களில் திருமணம் செய்த புதுமண தம்பதியர் மற்றும் அவரது உறவினர்கள் மலைக்கோவிலில் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.