பதிவு செய்த நாள்
31
அக்
2022
05:10
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நிறைவாக திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த 26 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன், கந்த சஷ்டி விழா துவங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும் யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி, நேற்று முன் தினம் நடந்தது. இந்நிலையில், கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதிகாலை, 6:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி ராஜ முத்தங்கி அலங்காரத்தில், காட்சியளித்தார். இந்த அலங்காரத்தில், சுப்பிரமணிய சுவாமியை தரிசித்த பக்தர்கள் பரவசமடைந்தனர். தொடர்ந்து காலை, 10:15 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. அதன்பின், பகல், 12:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, பள்ளத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சுப்பிரமணிய சுவாமியின் திருக்கல்யாண மொய்பணமாக, 57 ஆயிரத்து 910 ரூபாய் வசூலானது. திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.