பதிவு செய்த நாள்
02
நவ
2022
12:11
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தில் வெகு விமர்சையாக சதய விழா கொண்டப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்தாண்டு சதய விழா இன்று காலை(02ம் தேதி) இறைவணக்கம், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பத்மநாபன் குழுவினரின் மங்கள் இசை, களிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கத்துடன் விழா துவங்கியது தொடர்ந்து மேடை நிழ்வாக சதயவிழாக்குழு தலைவர் செல்வம் வரவேற்புரையாற்றினார். கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். பின்னர் கருத்தரங்கம் நடைபெற்றது. மாலையில் திருமுறை பண்ணிசை, திருமுறையின் திருநடனம், பரதநாட்டியம், நாதசங்கமம், கவியரங்கம், பட்டிமன்றம் ஆகியவற்றுடன் விழா முடிகிறது. பின்னர் நாளை(3ம் தேதி) மங்கல் இசை, தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருக்கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல், மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாவட்ட நிர்வாகம், அரண்மனை தேவஸ்தானம் சார்பில் மாலை அணிவித்தல், திருமுறை ஓதுவார் திருமுறைப்பண்ணுடன் ராஜவீதிகளில் திருமுறைத் திருவீதி உலா நடைபெறுகிறது.
தொடர்ந்து, குஜராத்திலிருந்து மீட்டு கொண்டுவரப்பட்ட ராஜராஜசோழன், உலோகமாதேவி உலோகசிலைகள் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவச்சாரியர்கள் சிறப்பு யாகம் நடத்தினர். பின்னர் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட 38 மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை பல்வேறு நிகழ்ச்சிகளும், இரவு ராஜராஜசோழன் மற்றும் உலோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலாவுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேஸ்தானம்,கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். விழாவில், மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ், இந்து சமய அறநிலைத்துறை இணை கமிஷனர் சூரிய நாராயணன், உதவி கமிஷனர் கவிதா, தமிழ் பண்டிட் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.